Thursday, March 18, 2010

ஆணியே புடுங்க வேண்டாம்.


ஆணியே புடுங்க வேண்டாம்...




நமது கிராமப்புறங்களில் வெட்டிவேலை செய்பவர்களை குறித்து கிண்டலடிக்கும் பிரபலமான பழமொழி ஒன்று உண்டு ""கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்..கிழவிய தூக்கி மனைல வைக்கறேன்னு"...அனேகமா, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புடுங்கறது எல்லாமே (மக்களுக்கு) தேவையில்லாத ஆணியாகத்தான் இருக்கும். பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள் மக்கள் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக பல்வேறு பிரச்சனைகள் "குட்டிச்சுவர் " போல மறைதுக் கொண்டிருக்கும்போது அதை தகர்த்து முன்னேற்றத்திற்கான பாதையை சரிசெய்யாமல், அந்த குட்டிச்சுவரில் அடிக்கபட்டிருக்கும் பழைய ஆணிகளை (பு)பிடுங்குவதில் தங்களது வீரத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.அதிலும் தற்போதைய முதல்வரும், அவருடைய அடிப்பொடிகளும் (புதுசு,புதுசா கிளம்பறாங்கப்பா) தேவையில்லாத ஆணிய பிடுங்குவதில் வடிவேலையே மிஞ்சிவிடுவார்கள் (வடிவேலை வைத்தே "ஒரு" ஆணிய புடுங்கினது தனிக்கதை)

முதலமைச்சர் பதவியில் நீண்டகால அனுபவமுள்ள தமிழின தலைவருக்கு உலக தமிழர்களின் இன்னல்களை தீர்ப்பது என்பது பெரிய காரியாமாகவே இருப்பதில்லை.பல்வேறு வகையான விருதுகளை அடிக்கடி பெறுவதின் மூலமும், தனது உயிருனும் மேலான உடன்பிறப்புகளுக்கு கடிதங்கள் எழுதுவதின் வாயிலாகவும், தனக்கு பிடிக்காதவர்களை சங்கத்தமிழில் வசைபாடுவதன் மூலமும் தமிழரின் துன்பங்கள் யாவற்றையும் ஓய்வில்லாமல் தீர்த்துவருகிறார். செயற்கரும் செயல்கள் பல செய்து களைத்து போய் ஓய்வெடுக்கும் நிகழ்வுகளையும் தமிழர் உயிரை காப்பதற்கே பயன்படுத்துகிறார். மேற்கண்ட உத்திகள் யாவையும் பின்பற்றப்பட்டு அவைகளும் பயனற்று ஏதாகிலும் பிரச்சனைகளை எதிர்கட்சிகளும், ஊடகங்களும் பெரிது படுத்தும்போது அவற்றை தீர்ப்பதற்கு அவர் பயன்படுத்தும் உத்திகள் அரசியல் சாணக்கியதனத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களாகும்.

பல வருடங்களாக 'வறண்டு' போய் கிடக்கும் பிரச்சனைகளான காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளாகட்டும், வாழ்வாதாரத்தை தேடி கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையினரையும், போர் விதிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்கும் பிரச்சனைகளாகட்டும்,.இதுதவிர எவையெல்லாம் மக்கள் மன்றத்தில் பெரும் விவாதங்களாக துவங்குகிறதோ அப்போதெலாம் அதனை 'ஏறக்கட்டும்' விதமாக உப்பு,சப்பில்லாத பிரச்சனைகளில் நேரடியாக அல்லது தமிழர் நலனுக்கு தங்களது உயிரையும் தர முன்வரும் அடிப்பொடிகளின் வாயிலாக தலையிட்டு ஒன்றுக்கும் உதவாத பிரச்சனைகளை பெரிதுபடுத்தி முக்கியமான பிரச்சனைகளை மறக்கடிக்க செய்வது கைவந்தகலை.

பெரிய அளவிலான எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ஏதுமின்றி தனது பதவியில் நீடித்திருக்க ஊடகங்கள் வாயிலாக நடத்தப்படும் இதுபோன்ற அட்டைக்கத்தி யுத்தங்களில் களப்பலியாக ஏதோவொரு சுமாரான பிரபலங்கள் மாட்டுவதுண்டு. தலைவரிடம் தங்கள் விசுவாசத்தை காட்டவும் அதன் மூலம் தங்களின் கடந்த கால அயோக்கியத்தனங்களை மக்களிடமிருந்து மறைக்கவும் ஆசைப்பட்டு இந்த அடிப்பொடிகள் செய்யும் அராஜக காமெடிகளுக்கு திரைமறைவிலிருந்து தலைவர் எழுதும் திரைக்கதைகள் சிறிது காலம் மிக பிரபலமாக இருந்து ஊடகங்களுக்கு தீனி போடும்.(திரைக்கதையின் இறுதியில் அடிப்பொடிகளின் ஆணியையே பிடுங்குவதுதான் ஆண்டி கிளைமேக்ஸ்)

நீண்....ட கால அரசியல் அனுபவமுள்ள ஒரு தலைவர் தனது குடும்பத்திற்க்காகவும், பதவிக்காகவும் 'ஜாக்குவார் தங்கம்' போன்ற அட்டைக்கத்திகளை கொண்டு "காய்ந்து போன குதிரைக்கு கொள்ளுக்கு பதில் வைக்கபுல்" என்ற ரீதியில் கடமைகளை செய்வதையும், குறிப்பாக தமிழையும், தமிழ் உணர்வுகளை குறிப்பிட்டு உசுப்பேற்றுவதை இனியாவது நிறுத்தலாம். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கன்னு இதுவரைக்கும் தமிழ் மக்களின் மீது அடிக்கப்பட்ட துருப்பிடித்த ஆணிகள் ஒன்றிரண்டையாவது 
புடுங்கி எறியலாம்..இல்லைனா....ஆணியே புடுங்க வேண்டாம்...

No comments:

Post a Comment

Infolinks

ShareThis